மனிதன் தனக்கு என்று ஏற்படுத்திக் கொண்ட கடவுள், மதம், மதக்கட்டளை கடவுள் கட்டளை எல்லாவற்றையும் பெரிதும் இயற்கைக்கும், உண்மைக்கும், விரோதமாகவும், அனுபவத்திற்கு முடியாததாகவும் கற்பித்துக் கொண்டான்.
மனித சமூக நன்மைக்காக, அதாவது மக்கள் சமூகம் சரீர உழைப்பினின்றும் காலதாமதத்தில் இருந்தும் காப்பாற்றப் படவும், அதிகப் பயன் அடையவும் கண்டுபிடிக்கப்பட்ட இயந்திரங்கள் எப்படி முதலாளிமார்கள் ஆதிக்கத்திற்கு ஆளாகி உழைப்பாளி, பாட்டாளிகட்கும் பட்டினியாகப் பயன்படுத்தப் படுகின்றதோ, அதுபோலவே மனிதனுக்கு மேன்மையையும், திருப்தியையும், கவலையற்ற தன்மையையும் உண்டாக்கித் தீர வேண்டிய பகுத்தறிவானது சிலருடைய ஆதிக்கத்திற்கு அடிமையாகி மக்களுக்குத் துக்கத்தையும், கவலையையும், தரித்திரத்தையும் கொடுக்கப் பயன்பட்டு வருகின்றது.
(இந்நூல் பக்கம் 75)
மனிதன் இப்படிப்பட்ட கீழ்மை நிலையில் இருந்து மேம்பாடு அடைய வேண்டுமானால் முதலாவதாக தன்னம்பிக்கை உடையவனாகவும், தனது சக்தி என்ன என்பதை உணர்ந்தவனாகவும் இருக்க வேண்டும்.
இன்று மனிதனிடம் தன்னம்பிக்கை இல்லை. தன்னைத் தான் நடத்துவதாக அவன் நினைப்பதில்லை. தனது காரியத்துக்குத் தான் பொறுப்பாளி என்பதில் நம்பிக்கை இல்லை. மனிதன் தான் கற்பித்துக் கொண்ட கடவுளையும், கடவுள் கட்டளையையும், கடவுள் சித்தாந்தத்தையும் வெகு குளறுபடி ஆக்கிக் கொண்டான்.
மனிதன் முதல் முதல் தவறிப் போன இடம் இதுவேயாகும். கடவுளும் கருமமுமே மனிதனின் பகுத்தறிவைப் பாழ்படுத்திப் பகுத்தறிவற்ற ஜீவ ராசிகளைவிட கேவலமாகி இன்று மனிதனைத் துக்க ரூபமாகவும், கவலைக் களஞ்சியமாகவும் ஆக்கி விட்டது. பகுத்தறிவுக்குக் கடவுளும், கருமமும் நேர் விரோதிகளாகும்.
(இந்நூல் பக்கம் 76)
Reviews
There are no reviews yet.